‘சின்ன வயசிலேயே அப்பா தவறிட்டாங்க’!.. ஓடி முடிச்சதும் ‘ஷூ’-வை கழற்றி முத்தம்.. தமிழகத்தின் ‘தங்கமகள்’ தனலட்சுமியின் உருக்கமான பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேசிய அளவிலான தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமியின் உருக்கமான பின்னணி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஃபெடரேஷன் கோப்பை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து, சர்வதேச வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். அதேபோல் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.


மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி, திருச்சி மாவட்டம் விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த சேகர்-உஷா தம்பதிக்கு 3-வது மகளாக பிறந்துள்ளார். தனலட்சுமியின் 15 வயதில் அவரது தந்தை எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். அதிலிருந்து தாய் உஷா கஷ்டப்பட்டு 3 பிள்ளைகளையும் கவனித்து வருகிறார். கறவை மாடு வளர்த்தும், தோட்ட வேலை மற்றும் 100 நாள் வேலைக்கு சென்று தனலட்சுமியின் தடகளப் பயிற்சிக்கு தாய் உஷா உதவி வருகிறார்.

இதுகுறித்து தெரிவித்த தாய் உஷா,  ‘பல சிரமங்களுக்கு மத்தியில், நகையை அடமானம் வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி தனலட்சுமியை பயிற்சிக்கும், போட்டிக்கும் அனுப்பினோம். இன்னும் கடனுக்கான வட்டியைக் கூட கட்டமுடியவில்லை. பயிற்சியாளர் ஆறுமுகமும், மற்ற சிலரும் உதவி வருகின்றனர். வருமான வரித்துறை, ரயில்வே வேலைக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை. அரசு வேலை கிடைத்தால் என் பொண்ணு இன்னும் நிறைய சாதிப்பாள். சர்வதேச அளவில் நாட்டுக்கு பெருமை சேர்ப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என தாய் உஷா பெருமையாக தெரிவித்துள்ளார்.

தனது 6 வயது முதலே ஓட ஆரம்பித்த தனலட்சுமி பள்ளி, கல்லூரி என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளார். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் வென்றதும் டிராக்கை வணங்கிய தனலட்சுமி, உடனே தனது ஷூக்களை கழற்றி முத்தமிட்டார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, ‘கடவுக்கு நன்றி சொல்லிவிட்டு, என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன்’ என கூறி தனலட்சுமி கண்கலங்கினார்.

முன்னதாக 200 மீட்டர் தகுதிச்சுற்று ஓட்டத்தில் 23.26 வினாடிகளில் கடந்து, 23 ஆண்டுகால முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் (1998-ம் ஃபெடரேஷன் கோப்பையில் 23.3 வினாடிகள்) சாதனையை தனலட்சுமி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆண்கள் பிரிவில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே ஊழியரான தடகள வீரர் இலக்கியதாசன் 100 மீட்டரில் வெள்ளிப்பதக்கமும், 200 மீட்டரில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். மேலும் திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர்கள் மூவருக்கும், திருச்சி ரயில்வே ஊழியரான மணிகண்டன் ஆறுமுகம் என்பவர், பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயிற்சி அளித்து அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்