‘என் மனைவிக்கு அபர்னா சரியான தேர்வு!’.. ‘இந்த காட்சிகளில் சிரிக்கவும் அழவும் செஞ்சேன்!’.. ‘நிஜவாழ்க்கை நெடுமாறன்’ ஜி.ஆர்.கோபிநாத் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு புகழாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் சூரரைப் போற்று' படத்துக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்
சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. கொரோனா அச்சுறுத்தலால்,திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல், அமேசான் ஓடிடியில் நேரடியாக இப்படம் வெளியாகியதை அடுத்து, திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கி ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே உருவாகியுள்ள இப்படத்தை பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில், “சூரரைப் போற்று படத்தில் நிறையக் கற்பனை இருந்தாலும், என் புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாக காட்சிப் படுத்தியுள்ளது. நேற்றிரவு பார்த்தேன். என் நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தேன்.
கொஞ்சம் நாடகத்தன்மையுடன் படம் இருந்தாலும், பின்தங்கிய கிராமப்புற தொழில்முனைவோரின் போராட்டங்கள், சிரமங்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது. என் மனைவி பார்கவியாகச் சித்தரிக்கப்பட்ட அபர்ணா சரியான தேர்வு என்று சொல்லலாம். தனக்கென ஓர் தனிக்கனவு, வலிமை மிகுந்த, மென்மையான ஆர்வமான, துணிச்சலான பெண்ணான அவர் கிராம பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.
கனவுகளை துரத்தும் பைத்தியக்காரத் தனத்தை கொண்டிருக்கும் ஒரு தொழில்முனைவோர் கதாபாத்திரத்தில் சூர்யா தனது சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொரோனா போன்ற இருண்ட காலங்களில் உத்வேகம் அளிக்கக் கூடிய திரைப்படம் இது!”, என ஜி.ஆர்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்