‘தொடர்ந்து வெடித்த வெடிகள்’... ‘தாய்-மகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘அலறிய பள்ளி குழந்தைகள்’... 'அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டிலேயே வெடி தயாரித்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் தாய்-மகள் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 50 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (55). இவர், அனுமதி பெறாமல் வீட்டிலேயே ‘பேப்பர் பட்டாசு’ என்று அழைக்கப்படும் நாட்டு வெடிகளை தயாரித்து விற்பனை செய்து வந்தார். கோபிநாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, இவருடைய மனைவி பாண்டியம்மாள் (45) மற்றும் மகள்  நிவிதா (18) இந்த தொழிலை செய்து வந்தனர். மகன் ரவி (22) தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் தயாரிக்கும் நாட்டு வெடிகளை திருவிழாக்கள், காதணி விழா, திருமணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்த மக்கள் வாங்கிச் செல்வர். இந்நிலையில், நேற்று ரவி வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல் 12.30 மணியளவில் பாண்டியம்மாளும், அவருடைய மகளும் வீட்டின் ஒரு பகுதியில் வெடிகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது பாண்டியம்மாள் வீட்டின் தகர மேற்கூரை வானத்தை நோக்கி பறந்தது. ஓடுகளும் நாலாபுறமும் சிதறின.

தொடர்ந்து சுமார் 5 நிமிடங்களுக்கு அவருடைய வீட்டில் இருந்து பலத்த சத்தத்துடன் வெடிகள் வெடித்துக் கொண்டே இருந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. வானை நோக்கி பறந்த தகர மேற்கூரை வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரம் தள்ளி போய் விழுந்தது. வெடிகள் வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்து பறந்த நெருப்பு அருகில் உள்ள சவுந்தரபாண்டியன் என்பவரது வீட்டின் கூரையில் தீப்பிடித்தது.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் இருந்த காவல்நிலையத்திலிருந்து சத்தம் கேட்டு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். சம்பவம் நடந்த வீட்டுக்குள் போலீசார் சென்று பார்த்தபோது, வீட்டின் ஒரு ஓரத்தில் பாண்டியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மற்றொரு பக்கத்தில் நிவிதா உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பாண்டியம்மாள் வீட்டுக்கு அடுத்துள்ள ஒரு கட்டிடத்தில் அங்கன்வாடி மையமும், அதற்கு அடுத்த கட்டிடத்தில் தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இந்த வெடி விபத்து நடந்த போது அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகளும், தனியார் பள்ளியில் 30 குழந்தைகளும் இருந்தனர். வெடி சத்தம் கேட்டு, அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளியில் இருந்த குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயத்தால் அவர்கள் அலறினர். குழந்தைகள் இருந்த கட்டிடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனால் குழந்தைகள் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். பக்கத்து வீட்டினர்,

அங்கன்வாடி மையம், பள்ளி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர், உயிருக்கு பயந்து, அருகிலிருந்த தோப்பில் தஞ்சம் அடைந்தனர்.பாண்டியம்மாள் வீட்டின் அருகே இருந்த மூன்று வீடுகள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி, பார்வதியம்மாள் (70) என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து ரவி தனிமையாகி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

THENIFIREACCIDENT, POLICE, KILLED, MOTHER, DAUGHTER, EXPLOSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்