'கட்டிட தொழிலாளியின் மகளுக்கு நிஜமான டாக்டர் கனவு'... 'கையில் வந்த எம்பிபிஎஸ் சேர்க்கை ஆணை'... நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் மகிமைதாஸ். இவர் அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவரின் இரண்டாவது மகளான ஸ்வேதா, ஓசூர் காமராஜ் காலணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2019-20ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இவர், அதே ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 208 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மாணவி ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தனது வாழ்நாள் கனவான, மருத்துவர் ஆக வேண்டும் என்பது தற்போது நிறைவேறியுள்ளது அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அவர், '' 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததால் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்தது.
அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சாத்தியமாகி உள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என கூறியுள்ளார்.
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லதா கூறும்போது,''எங்கள் பள்ளியில் நீட் தேர்வுக்கான அரசு ஆன்லைன் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் 12 மாணவிகள் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்ற 3 பேரில் மாணவி ஸ்வேதாவுக்கு எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவி ஸ்வேதா தான் எழுதிய முதல் நீட் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார்'' என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்