‘கொரோனா அச்சுறுத்தல்’... ‘ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை’... எப்படி திரும்ப பெறலாம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா அச்சுறுத்தலால் ரத்தான ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், பலருக்கும் பரவுதை தடுக்க எண்ணற்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னக ரெயில்வே பயணச் சீட்டுகளின் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பு துறை அதிகாரி வீராசுவாமி தெரிவித்துள்ளதாவது, ‘ஆன் லைனில் பதிவு செய்த பயணச்சீட்டுகளை திரும்பப் பெறுவதற்கான விதிமுறையில் மாற்றம் இல்லை. இதற்காக அவர்கள் ரயில் நிலையத்துக்கு வர வேண்டியது இல்லை.

ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்த பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன‌. இந்த நடைமுறை 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரயிலை ரத்து செய்தால், அதற்கான பயணச்சீட்டை பயண தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்.

ரயில்வே நிர்வாகம் ரத்து செய்யாத நிலையில் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், அந்த பயணிகள் பயண தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டை ஒப்படைத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு இந்த ரசீதினை 60 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோட்ட வர்த்தக மேலாளருக்கு அனுப்பி வைத்து டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்.

ரயில் பயணத்தை தொலைபேசி எண் 139 வாயிலாக ரத்து செய்தவர்கள், பயண தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் டிக்கெட் கட்டணத்தை ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனால் பயணிகள் இந்த விதிமுறை மாற்றத்தை பயன்படுத்தி கொண்டு ரயில் நிலையத்துக்கு வருவதை தவிர்க்கவும்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்