'சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா...' ' யாரெல்லாம் அந்த சலூன்ல முடி வெட்டினாங்க...' தீவிரமாக கண்காணிக்கும் மாநகராட்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பேடு மார்க்கெட்டில் ஊரடங்கு விதியை மீறி சலூன் கடை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டியவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மாநில அரசு  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, பல தடைகளை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், இளைஞர் ஒருவர்  கோயம்பேட்டில் சலூன் கடை திறந்து நடத்தி வந்துள்ளார்

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஒருவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சலூன் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி தன் கடையை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடிவெட்டியுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை ட்ராக் செய்யும் போது, அவரது கடையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் முடிவெட்ட, சவரம் செய்ய சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் சலூன் கடைக்காரருக்கு எவர் மூலம் கொரோனா தொற்று பரவியது என்பதை பற்றியும் ஆய்வு நடத்து வருகின்றனர் சென்னை மாநகர பணியாளர்கள். மேலும் அவர் கடையை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கடந்த 14 நாட்களாக முடிவெட்டியவர்களை வலை போட்டு தேடிவருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் மூலம் அப்பகுதியில் இருக்கும் 4 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதால் அவர்களின் இரத்த மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் இட மாற்றம் செய்யப்பட உள்ளது.

இந்த சம்பவம் கோயம்பேடு மார்க்கெட் சுற்றுவட்டார பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

(கொரோனா வைரஸிற்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு விதியை கடைபிடிப்பதே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒரே வழியாகும்)

மற்ற செய்திகள்