"40 ஆயிரம் கொடுத்தா.. 4 லட்ச ரூபாய் வரும்..".. ஏடிஜிபியின் போலி பேஸ்புக் கணக்கில் இருந்து போன 'வைரல்' மெசேஜ்.. 'தமிழகத்தை' உலுக்கிய பகீர் 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நாட்டிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா கோர தாண்டவம் ஆடுவதையடுத்து மத்திய மாநில அரசுகள் இந்த சூழலில் நிதி தந்து உதவ வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் இதை வைத்து காசு சம்பாதிக்க நினைத்த வடமாநில கும்பல் போலி முகநூல் கணக்குகள் மூலம் கொரோனாவின் பெயரால் நிவாரணம் வசூல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடியை காவல் துறையில் இயங்கி வரும், உயர்பதவியில் இருக்கும், பிரபல காவல்துறையினரின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி இந்த கும்பல் செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவின் கூடுதல் டிஜிபி ஐபிஎஸ் அதிகாரி ரவி. இவர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இயங்கிவருவதோடு சமூகப் பொது விழிப்புணர்வு, காவல்துறையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பதிவுகளாக வெளியிட்டு வருகிறார். இவருடைய கணக்கை ஏராளமானோர் பின்தொடருவதோடு, இவரது கணக்கில் பல முக்கிய விஐபிகளும் தொடர்பில் உள்ளனர். இந்த நிலையில் கூடுதல் டிஜிபி ரவியின் பேஸ்புக் கணக்கில் இருந்து அவருடைய நண்பர்கள் பலருக்கும் தனித்தனியாக பேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்குவதாகவும் அதற்கென முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அனுப்பினால் அந்த 4 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக தானும் பணத்தை செலுத்தி இருப்பதாக ரவி சொல்வதுபோல், அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டு அனைவருக்கும் சென்றுள்ளது. அந்த மெசஞ்சரில் ஒரு வங்கிக் கணக்கும் இருந்துள்ளது.
இது தொடர்பாக ரவியின் நண்பர்கள் சிலர் அவருக்கு தொடர்பு கொண்டு இதுபற்றி பேசிய போதுதான் அவருக்கு இது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் சோதனை செய்ததில் அவருடைய பெயரிலேயே முகநூலில் இன்னொருவர் அவருடைய புகைப்படத்தையும் அவருடைய பதிவுகளையும் வைத்து போலி கணக்கு தொடங்கி இயங்கி வந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ந்த ஐபிஎஸ் ரவி, இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த குறுஞ்செய்தியில் இருந்த வங்கிக் கணக்கானது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வங்கி கணக்கு என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் மதுரை மாநகர காவல் ஆணையரான டேவிட்சன் ஆசீர்வாதம் என்பவரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி, இதே பாணியில் மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு பணமோசடி செய்யப்பட்டுள்ளன. வடமாநிலத்தை சேர்ந்த இந்த மோசடி கும்பல் ராணுவ அதிகாரிகளின் பெயரிலும் இன்னும் பல பிரபலங்களின் பெயரிலும் தொடர்ந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் இதுபோன்ற நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்