'Bro, இது எப்படி சாத்தியம்'?... 'அசந்து போன நெட்டிசன் கேட்ட கேள்வி'... 'பின்ன யாரோட மகன் அவரு'... நெகிழ வைத்த விஜய் வசந்த்தின் நச் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்த இக்கட்டான நேரத்தில் விஜய் வசந்த் செய்த உதவி நெட்டிசன்களை நெகிழச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், மறுபக்கம் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைத்  தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் மிச்சமாகும் தொகை கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களை முதலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து நோயின் தன்மையைப் பார்த்து அவர்கள் கோவிட் கேர் சென்டர்களில் அல்லது வீட்டுத் தனிமையில் இருக்க வைப்பது வழக்கம். இந்தப் பணிகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடுதலாகத் தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி அதனை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், நெட்டிசன் ஒருவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், உங்களால் இந்த உதவியை எப்படிச் செய்ய முடிந்தது என ஆச்சரியத்துடன் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த எம்பி விஜய் வசந்த், ''நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நிதி வசதிகள் பெறத் தாமதம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த வசதியை எனது சொந்த செலவில் செய்துள்ளேன். நம்மால் முடிந்தவரை மக்களுக்காகச் செய்வோம்'' எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது சொந்த பணம் மூலம் உதவி செய்து வரும் விஜய் வசந்த்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். பல ஆயிரம் பேருக்கு உதவி செய்து வந்த வசந்த குமாரின் மகன் அல்லவா விஜய் வசந்த், எனவே தந்தையின் குணம் மகனுக்கும் இருக்கும் எனப் பலரும் நெகிழ்ந்து போனார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்