“ஆடையில்லா ராமர், சீதை ஃபோட்டோ.. செருப்பு மாலை”.. “பெரியார் பேரணி குறித்து”.. அவதூறாக பேசியதாக “ரஜினி” மீது புகார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அண்மையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள் என்றும், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்றும் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது.

மேலும் அதே நிகழ்வில் தமிழக அளவில் சோ பிரபலமாவதற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் மற்றும் கருணாநிதி ஆகியோர் காரணமாக இருந்ததாகவும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியை ஒட்டி நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்ட ரஜனி, அந்த பேரணியில் ராமர் மற்றும் சீதையின் ஆடையில்லா படங்கள், செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அந்த சம்பவத்தை வேறு பத்திரிக்கைகள் எதுவும் பிரசுரிக்காத நிலையில் துணிச்சலாக சோ, துக்ளக் பத்திரிகையில் பிரசுரித்ததாகவும் ஆனாலும்  ஆனாலும் அந்த இதழை, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சீஸ் செய்ததாகவும், பின்னர் அதனை வெளியிட்டபோது பிளாக்கில் அதே விலைக்கு விற்கப்பட்டதாகவும் கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  1971 ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதை ஆகியோரின் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாக ரஜினி கூறியது அப்பட்டமான பொய் என்றும், தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினி இப்படி பேசி, பொது அமைதியை குலைத்துள்ளதாகவும், அதனால் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்