18 இடங்களில் 'குண்டுவெடிப்பு'... 58 பேர் பலி...252 பேர் படுகாயம்... கறுப்பு தினத்தின் '22ம் ஆண்டு' 'நினைவு தினம் இன்று'... 'நினைவலைகளை' பகிரும் ஓய்வுபெற்ற 'உதவி ஆணையர்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வின் 22ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

பிப்ரவரி -14...உலகமே காதலர் தின கொண்டாட்டத்தில் இருக்கும்போது கோவையை பொறுத்தவரை அந்த நாள் கறுப்பு தினமாகவே பார்க்கப்படுகிறது.

கோவையில் கடந்த 1997ஆம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் தான் 1998 பிப்ரவரி 14ம் தேதி குண்டுவெடிப்பு கலவரமாக மாறி கோவையை துவம்சம் செய்தது.

4 நாட்களில் தொடர்ந்து 18 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவங்களில் 58 பேர் வரை உயிரிழந்தனர். 252 பேர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக எல்.கே.அத்வானி கோவை வருவதாக இருந்தது. அங்கு பா.ஜ.கவேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பேசுவதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானம் அரை மணி நேரம் தாமதமானதால் அவருடைய உயிர் தப்பியது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த அன்றைய தினம் பணியிலிருந்த உக்கடம் குற்றப்பிரிவு ஆய்வாளர்  திரு. ராஜமாணிக்கம் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.  முதல்வரிடம் வீரச் செயலுக்கான தங்கப்பதக்கம் வாங்கி உதவி ஆணையராக பணிஓய்வு பெற்ற திரு. ராஜமாணிக்கம் இதுகுறித்து கூறுகையில்...

"அன்றைய தினம் கோவை வருவதாக இருந்த அத்வானிக்கு மெய்க்காபாளராக நான்  நியமிக்கப்பட்டிருந்தேன். சபாரி உடையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த என்னுடன் 4 உதவி ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர். மதியம் சுமார் 3:30 மணியளவில் விமானம் தாமதம் என்ற செய்திவந்தது. அதனால் மேடை அருகே இருந்த டெலிபோன் பூத்திலிருந்து திருச்சியிலிருந்த எனது மனைவியுடன் பேசினேன். சாப்பிட்டீர்களா என்று கேட்டார். சாப்பிடாமலேயே , அவர் மனம் நோகாமல் இருக்க சாப்பிட்டதாகச் சொன்னேன். பேசி முடித்து வெளியேறிய அடுத்த 2 நிமிடத்தில்

டெலிபோன் பூத் பயங்கர சத்தத்துடன் சூறாவளி வேகத்தில் தீப்பிழம்போடு ஆகாயத்தில் பறந்து சென்று விழுந்தது.

போலீஸ் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. என் காலருகே, வெடிகுண்டினால் தூக்கி எறியப்பட்டவர் உடல் விழுந்தது. இது அல்உம்மாக்களின் ஆட்டம் என புரிந்துவிட்டது. அன்று இரவு திருமால் வீதி பாபுலால் காம்பளக்சில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைப் பிடிக்க முற்பட்டேன். 8 எதிரிகளை கைது செய்தோம்.

4 வருடம் கழித்து, 2002 ஆம் ஆண்டு எனக்கு காவல்துறையில் உயரிய விருதான வீரச் செயலுக்கான தங்கப் பதக்கம் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வழங்கப்பட்டது." என்று தனது நீண்ட நினைவுகளை விவரிக்கிறார்.

இன்றைய தினம், பல்வேறு ஹிந்து அமைப்புகளால் இந்த கோர சம்பவத்தின் 22ம் ஆண்டு நினைவு தினம் ஊர்வலமாக சென்று கோவையின் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் துறை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் ஐஜி, டிஐஜி மற்றும் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பாதுகாப்புப் பணியில் 12 மாவட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

COIMBATORE, 1998, BOMBING, COMMEMORATION, ANNIVERSARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்