'எவ்ளோ நேரம் தான் மரத்துலையே இருப்பீங்க...' 'கொஞ்சம் இறங்கி வந்து நாங்க சொல்றத கேளுங்க...' - சுகாதாரத் துறை அதிகாரிகள் வந்த உடனே 'தெறித்து' ஓடிய கிராம மக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பத்தூரில் உள்ள பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டு தப்பி ஓடிய கிராம மக்கள், ஒளிந்து கொண்டனர்.

சென்னையை விட அதிகமாக கோயம்பத்தூரில் பரவிக் கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மற்றும் ஊரகப் பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைச் சுகாதாரத் துறையினர் செலுத்தி வருகின்றனர்.

ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் நடக்கிறது. இந்த நிலையில், கோவை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுவதாக தகவல் எழுந்தது. இதன் காரணமாக அந்த கிராமங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

திட்டத்தின்படி, தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் போரத்தி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்றைக்கு முன்தினம் (02-06-2021) சென்றனர். தடுப்பூசி மீது பரப்பப்பட்ட புரளி செய்திகளை நம்பி, மருத்துவக் குழுவினரைக் கண்டதும், கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் ஓடினர்.

சிலர் அங்கிருந்த விவசாய நிலங்களிலும், தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டனர். இளைஞர்கள் சிலர் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தனர்.

வயதானவர்கள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்கள் உள்ளதாகக் கூறி தடுப்பூசி வேண்டாமென சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி சமாதானம் செய்த பின்னர், சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

(வாட்சப் செய்திகள், வதந்திகளை பரப்பும் வீடியோக்களை நம்பாமல் முறையாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் செலுத்துவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அத்தியாவசிய கடமை ஆகும்)

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்