‘ஆம்புலன்ஸ்ல ஏத்தும்போதே உயிர் இல்ல’.. 6 வயசு சிறுவனுக்கு நடந்த கொடுமை.. கோவையை உலுக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் பெற்ற மகனை தாய் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த திவ்யா என்ற பெண் தனது 6 வயது மகன் அபிஷேக் மற்றும் 3 வயது மகளுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். அவர்களுடன் திவ்யாவின் கணவர் என சொல்லப்படும் ராஜதுரை என்பவரும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் மகன் அபிஷேக்கிற்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி 108 ஆம்புலன்ஸை திவ்யா அழைத்துள்ளார்.

இதனை அடுத்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் அபிஷேக்கை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுவனின் உடலில் காயங்கள இருந்ததால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் திவ்யா மற்றும் ராஜதுரையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு சிறுவன் குறும்பு செய்ததால் தாய் திவ்யா சிறுவனை கடுமையாக தாக்கியதாகவும், பிறகு அவரே மெடிக்கல் சென்று வலி நிவாரணி மருந்து வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் காலையிலும் சிறுவன் மயக்க நிலையில் இருந்ததால் ஆம்புலன்ஸை அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திவ்யா தனது கணவர் அருணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதனை அடுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கால் டேக்ஸி டிரைவர் ராஜதுரை என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கால் டேக்ஸி டிரைவர் ராஜதுரையுடன்தான் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா கோவை கோவில்மேடு பகுதிக்கு குடியேறியுள்ளார். ஆனால் அவர்களின் உறவுக்கு சிறுவன் அபிஷேக் தடையாக இருந்ததால், ஆத்திரமடைந்த திவ்யா சிறுவனை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் சிறுவனை கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே சிறுவனின் உடலில் உயிர் இல்லை என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் திவ்யா மற்றும் ராஜதுரையை கைது செய்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்