ரூ.5-க்கு டிபன்... ரூ.10-க்கு சாப்பாடு... ரூ.30-க்கு மருத்துவம்!.. விடைபெற்றார் 'கியர்மேன்' சுப்ரமணியம்!.. கண்ணீரில் மூழ்கியது கோவை!.. யார் இவர்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியம் மரணமடைந்தார்.

கோவை நகரின் அடையாளங்களில் ஒன்று சாந்தி கியர்ஸ். கடந்த 1972 ஆம் ஆண்டு வாக்கில் சாந்தி இன்ஜீனியரிங் அண்டு டிரேடிங்க் கம்பெனி என்ற பெயரில் சிங்காநல்லூரில் இந்த நிறுவனத்தை சுப்ரமணியம் தொடங்கினார்.

பிறகு, 1986 ஆம் ஆண்டு சாந்தி கியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டாக மாற்றப்பட்டது. பி.எஸ்.ஜி கல்லூரியில் பாலிடெக்னிக் படித்த சுப்ரமணியம் பிறகு, அதே பாலிடெக்னிக்கில் இன்ஸ்ட்ரக்டராகப் பணியாற்றினார்.

ஆனால், அவருக்கு ஒரு மிகப் பெரிய கனவு இருந்தது. அந்த கனவுதான் சாந்தி கியர்ஸ் நிறுவனமாக மாறியது. கியர்கள் தயாரிப்பதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி. சுப்ரமணியத்தின் திட்டமிடலாலும் கடும் உழைப்பாலும் கியர்கள், கியர் பாக்ஸ்களை தயாரிப்பதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக சாந்தி கியர்ஸ் மாறியது. பிற்காலத்தில் , கோவையின் கியர்மேன் என்ற செல்லப் பெயரும் சுப்ரமணியத்துக்கு உருவானது.

       

தற்போது, சாந்தி கியர்ஸ் இணையதளத்தில் முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 -ஆம் ஆண்டு முருகப்பா குழுமம் சாந்தி கியர்ஸை வாங்கியுள்ளது.

சாந்தி கியர்ஸில் பணி புரிவதைப் பெருமையாகக் கருதுமளவுக்கு ஊழியர்களுக்கு சம்பளமும் போனசும் வழங்கப்பட்டது. அதோடு, சமூக நலப்பணிகளிலும் சுப்ரமணியம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு தன் மனைவி சாந்தியின் பெயரில் சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கினார்.

கோவை சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் உணவகம் புகழ் பெற்றது. தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் வகையில் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

மதிய சாப்பாடு 10 ரூபாய், டிபன் வகைகள் வெறும் 5 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா? மாதம் முழுக்க சாப்பிட்டாலும் 1,000 ரூபாயைத் தாண்டாது. சுத்தத்திலும் சுகாதாரத்திலும்  உயர்தர ஹோட்டல்களையே தோற்கடித்து விடுமளவுக்கு இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

சிங்காநல்லூரில் இந்த அறக்கட்டளை நடத்தும் பங்கில் பெட்ரோல் அடித்தால் ஒரு சொட்டு கூட குறையாது. மருத்துவப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து கொண்ட சாந்தி சோசியல் சர்வீஸ் மருத்துவமனையையும் நடத்துகிறது. மருத்துவமனையில் கட்டணம் ரூ.30 தான்.

ஏழைகளுக்கு குறைந்த விலையில், அதாவது 30 சதவிகிதம் குறைத்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும்  இயங்கி வருகிறது.

இப்படி, தொழிலிலும் சமூக சேவையிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சுப்ரமணியம் இன்று மரணமடைந்தார். தற்போது, 78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்தனை மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், சுப்ரமணியம் ஊடகங்களில் தன் முகத்தை காட்டியதே இல்லை. முகத்தையும் காட்டாமல் முகவரியையும் தெரிவிக்காமல் வாழ்ந்த வள்ளலின் மறைவால் கோவை மக்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்