'மாமியாரை தாக்கிவிட்டு கடத்தப்பட்ட புதுமண பெண்'... 'பதறிய கணவர்'... எதிர்பாராமல் நடந்த புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று கடத்தி செல்லும் வீடியோ வைரலாக பரவிய நிலையில், புதிய திருப்பமாகக் கடத்தப்பட்ட பெண் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம், லூனா நகர், வித்யாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவரும்  திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவருடைய மகள் தமிழினி பிரபா என்ற பெண்ணும் கடந்த 2 வருடங்களாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்கள். காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழினுக்குக் கட்டாய திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய தமிழினி, கார்த்திகேயனுடன் கடந்த 5-ந் தேதி மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டு, பதிவும் செய்து கொண்டனர்.கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்தச்சூழ்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பலர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரைத் தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கார்த்திகேயன் துடியலூர் போலீசில் புகார் செய்த நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்தச்சூழ்நிலையில் திருச்சியில் முகாமிட்டு இருந்த போலீசார், தமிழினி பிரபாவிடம் விசாரணை மேற்கொண்டதில் தன்னை யாரும் கடத்தவில்லை எனப் பரபரப்பு பதிலைக் கூறியுள்ளார். மேலும் இரு வாரங்களில் பெற்றோரைச் சமாதானப்படுத்திய பின்பு கணவரின் வீட்டிற்குச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தான் கூறியதை தமிழினி பிரபா எழுத்துப் பூர்வமாக காவல்துறையினருக்கு எழுதிக் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காதல் திருமணம் செய்ததற்க்காக இளம் பெண் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த பெண்ணே தான் கடத்தப்படவில்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்