'ஒருநாள் பாதிப்பில் சென்னையை மிஞ்சிய மாவட்டம்'... இப்படி நிலைமை தலைகீழாக மாற என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று முன்தினம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையே முதலில் இடத்திலிருந்து வந்தது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் பாதிப்பு காணப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று கால் பதித்ததில் இருந்து நேற்று முன்தினம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையே முதலில் இடத்திலிருந்து வந்தது.

ஆனால் நேற்று மாலை சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் பாதிப்பு எண்ணிக்கையில் இதுவரை முதலில் இடத்திலிருந்த சென்னையை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்து மோசமான சாதனையைப் படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் கோவையில் 4,268 பேருக்குத் தொற்று உறுதியாகி மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சென்னையில் 3,561 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து இப்போது தான் கோவையில் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 77 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் சென்னையுடன், கோவையை ஒப்பிடுகையில் நோய்த் தொற்று மிகவும் அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே சென்று கொண்டுள்ளது.

கோவையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சர்வ சாதாரணமாக வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதுவும் கொரோனா தொற்று பரவுவதற்குக் காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கோவையில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். ஆனால் பரிசோதனை முடிவுகள் வர மிகவும் தாமதமாகிறது. இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

கேரளாவில் உச்சத்தில் கொரோனா இருந்த போது அங்குள்ள பலர் இங்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டதும் கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கோவையில் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் அதிகம் இருப்பதால் தொழிலாளர்களுக்கிடையே தொற்று பரவுவது ஊரடங்கு தொடங்கும் வரை அதிகமாக இருந்தது. ஊரடங்குக்குப் பிறகு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இவையெல்லாம் தான் கோவையில் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கக் காரணங்கள். கோவையை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையையும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையையும் தனியே பிரித்துப் பார்த்தால் கோவையின் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்