'அண்ணே, யாரு அது'... 'கொரோனா வார்டுக்கு வெளிய சேர் போட்டு உக்காந்து இருக்காரு'... யாருன்னு தெரிஞ்சதும் திக்குமுக்காடி போன மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இக்கட்டான சூழ்நிலையிலும் அதிகாரிகள் அந்த அளவிற்கு மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று பரவலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் கோவை முதலிடத்திலிருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்திலிருந்த நிலையில் தற்போது கோவை தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன்,  மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோருடன் கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக், வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆளுக்கு ஒரு புறம் களத்தில் நின்று கொரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூன் 6) மாலை 5 மணி அளவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், அங்கிருந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகளை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து கொரொனா வார்டு முன்பாக சேரை போட்டு அமர்ந்த மாவட்ட ஆட்சியர் நாகராஜன், சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்களின் பணிகளைக் கண்காணித்தார்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் சேரில் அமர்ந்திருந்த படி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளையும், அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் கையாளும் விதத்தையும் நேரடியாகப் பார்வையிட்டார். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மருத்துவமனையில் உயர் மருத்துவ அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் சாதாரணமாக அமர்ந்திருந்தபடி மருத்துவமனை பணிகளைப் பார்வையிட்டதுடன், ஊழியர்களிடமும் கலந்துரையாடினார்.

மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 மணி நேரமாக அமர்ந்து இருந்த நிலையில், யார் இது நிறைய நேரமாக உட்கார்ந்து இருக்கிறாரே என அங்கிருந்த மக்கள் யோசித்தனர். பின்னர் தான் அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் என்பது தெரியவந்த நிலையில், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்