'18 மாவட்டங்களில்'... 'ரூ 280.90 கோடி மதிப்பில் புதிய நீர்வள திட்டப்பணிகள்'... 'அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுப்பணித் துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ 280 கோடியே 90 லட்சம் மதிப்பிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம், கண்டரக்கோட்டை கிராமம், பெண்ணையாற்றின் குறுக்கே ரூ 33 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அத்துடன் திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் தத்தமஞ்சி இரட்டை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் உருவாக்க ரூ 62 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூர் அருகில் பாலாற்றின் குறுக்கில் ரூ 42 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி, கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கில் ரூ 15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றிற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மலட்டாற்றை ரூ 15 கோடியே 5 லட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்துதல், நாகை மாவட்டம், திருநகரியில், வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே ரூ 30 கோடியே 96 லட்சம் மதிப்பில் கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி, சிவகங்கை மாவட்டத்தில் உப்பாற்றை சீரமைக்க ரூ 14 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பணிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோரத்தில் ரூ 15 கோடியே 38 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, ஈரோடு, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவாரூர், விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில், ரூ 52 கோடியே 49 லட்சம் மதிப்பிலான திட்டப்பணி என ரூ 280 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், வணிகவரித் துறை சார்பில் ரூ 12 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கே.சண்முகம், துறை செயலர்கள் க.மணிவாசன், பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவர் பி.ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் பங்கேற்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்