'விழித்திருப்போம்; விலகியிருப்போம்' 'வீட்டிலேயே இருப்போம்' 'முதல்வரின் ட்விட்டர்' பதிவுகளுடன் 'இணைந்திருப்போம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்திகள் மற்றும் அரசின் அறிவிப்புகளை தமிழக மக்களுக்கு உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அசாதாரணமான இந்த சூழ்நிலையில், அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளை, மிக வேகமான சமூக வலைதளப் பதிவுகள் மூலமாக, தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் நேரடி அறிவிப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழலில் வைரசை போலவே வேகமாக பரவி வரும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களை முதல்வரின் ட்விட்டர் பக்கத்தின் மூலமாக பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். முதல்வரின் இந்த நேரடி அறிவிப்புகள் அரசின் அறிவிப்புகள் குறித்த பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களை தீர்த்து வைப்பதுடன், அரசின் உதவிகள் மற்றும் சலுகைகளை பெறவும் வழி வகுக்கிறது.

சமீபத்தில் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சில செய்திகளை காணலாம்...

ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்ட்டிலேட்டர்களை கொரோனா வைரஸால் உண்டாகின்ற மருத்துவ சிகிச்சைக்காக, தமிழ்நாடு அரசிற்கு HCL நிறுவனம் தர முன்வந்ததற்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்கும் வகையிலும், அரசுக்கு நிதியுதவி அளிக்கும் வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளார். அரசின் இந்த வங்கி சேமிப்பு கணக்கில் பலரும் தங்களால் இயன்ற தொகையை செலுத்தி வருகின்றனர்.

நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் பேருக்கு உணவளித்து வரும் அம்மா உணவகங்கள் சீராக செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் அங்கு சாப்பிட வருபவர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரித்தார். அது குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அம்மா உணவகத்தில் தானே உணவு உண்டு அதன் தரம் குறித்து சோதித்தறிந்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரில் சென்று வழங்குமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் தங்கி வேலை செய்து வரும் தமிழக தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அம்மாநில அரசுக்கு வலியுறுத்தியதையடுத்து, அங்குள்ள போலீசார் தமிழக தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் முதல்வர் உறுதி செய்துள்ளார்.

அண்ணா நகர் தங்கம் காலனியில் வசித்து வரும் பிற மாநில தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அவர்களது சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் நடவடிக்கைகள் தமிழக அரச சார்பில் மேற்கொள்ளப்பட்டதை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று 2-ஆம் கட்டத்தில் இருப்பதாகவும், அது 3-ஆம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், எந்தவிதமான வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விழித்திருப்போம்; விலகியிருப்போம்; வீட்டிலேயே இருப்போம்; கொரோனாவை வெல்வோம்! என தொடர்ந்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தனது ட்விட்டர் பக்கத்தின மூலம் பொதுமக்களுக்கு முதல்வர் தெளிவு படுத்தி வருகிறார். 

மிக விரைவான சமூக வலைதள டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காலத்திற்கு ஏற்றாற்போல் தனது பணிகளை தகவமைத்துக் கொண்டு, துரித கதியில் மக்கள் நலப்பணிகளையும், விழிப்புணர்வு மற்றும் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்களும் தங்கள் பேராதரவை  தெரிவித்து வருகின்றனர்.

CORONA, EDAPPADI PALANISWAMI, TWITTER, TAMILNADU, AWARENESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்