'துண்டு சீட்டு இல்லாமல், ஒரே மேடையில் விவாதிக்க ரெடியா'?... ஸ்டாலினுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் என்னோடு விவாதிக்கத் தயாரா? என, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இந்தியா டுடே பத்திரிகை சார்பில்  ‘அடுத்த 5 ஆண்டில் தமிழகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது முதல்வரின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், அரசியலில் தான் கடந்து வந்த பாதையைக் குறித்துப் பேசினார்.

அதில், ''1974-ல் நான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை எதிர்த்து தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதிலிருந்து நான் கட்சியில் தீவிரமாக பணியாற்றினேன். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைத்தேன். யாரிடமும் எந்த சிபாரிசுக்கும் சென்றது இல்லை. நான் இந்த நிலைக்கு வர என்னுடைய உழைப்பும், சொந்த முயற்சியும் தான் காரணம்.

1989-ல் அ.தி.மு.க. ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்தது. அந்த நேரத்தில் நான் அம்மாவின் பக்கம் நின்றேன். அப்போது அம்மா அவர்கள் எனக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்.ஆனேன். அதிலிருந்து கட்சியில் பல பொறுப்புகளை வகித்தேன். பல வாரியங்களுக்குத் தலைவராகவும் பணியாற்றினேன். பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்றேன்.

2011- ஆண்டு அம்மா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றேன். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். எனது செயல்பாடுகளைப் பார்த்த அம்மா, எனக்குக் கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை இலாக்காவையும் ஒதுக்கினார். அந்த பணியையும் நான் சிறப்பாகச் செய்தேன். அம்மா மறைவுக்குப் பிறகு முதல்-அமைச்சர் சேவையைச் செய்வதுதான் எனது பிரதான பணியாகும். மக்கள் பிரச்சனைகளை நான் முழுமையாக அறிந்துள்ளேன்.

நான் பிறந்தது ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில், அதனால் மக்கள் பிரச்சனைகள் என்னவென்பது எனக்கு முழுமையாகத் தெரியும்.மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து வந்துள்ளேன். அதனால்தான் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறேன். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்.

தமிழகம் இன்று பல துறைகளில் சாதனை படைத்து பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தியதால் இந்த சாதனைகளை மக்கள் எனக்குக் கொடுத்துள்ளார்கள். கல்வியில் எப்போதும் தனிக் கவனம் செலுத்தும் இந்த அரசு, உயர்கல்வி படிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுத் தொடங்கி உள்ளோம்.

நாங்கள் போடும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். எங்களிடம் இருந்து கசியும் திட்டங்களை அவரது திட்டங்கள் போலச் சொல்கிறார். அதே நேரத்தில் நான் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். துண்டு சீட்டு இல்லாமல் ஒரே மேடையில் அவர் என்னுடன் விவாதிக்கத் தயாரா?. நான் பயணித்த அரசியல் காலம் மிகவும் கடுமையானது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடனும் நான் அரசியல் பணி செய்துள்ளேன். அதில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி'', என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்