'தாம்பூலத்தட்டு... பட்டுப்புடவை... பாதபூஜை!'... துப்புரவு பணியாளரை மலர் தூவி பூஜித்த தாய்-மகள்!... திகைப்பூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கின் போதும் சேவை செய்து வரும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு மலர் மாலை, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து பெண் ஒருவர் பாத பூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்கியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருந்தாலும், தினந்தோறும் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் மட்டும் குறைவதில்லை. அந்த குப்பைகளை அப்புறப்படுத்துவது என்பது இன்றைய சூழலில் உயிரை பணயம் வைப்பதற்கு சமம் என்றால் மிகையாகாது. இந்த தருணத்திலும் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பலருக்கும் தெய்வமாகத் தெரிகிறார்கள்.

அதே நேரம் துப்புரவு பணியாளர்களின் பணியை அனைவரும் மனதுக்குள் பாராட்டினாலும், நேரில் சென்று பாராட்ட முன்வருவதில்லை. பணம், பதவி, அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய காலத்தில், துப்புரவு பணியாளர்களும் வணக்கத்திற்குரியவர்களே என்பதை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு பெண் நிரூபித்து காட்டி உள்ளார்.

பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 48). அவர், பல்லடம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் 14-வது வார்டு கணபதி நகரில் வசந்தா தள்ளுவண்டியில் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்துக்கொண்டே வந்துள்ளார்.

அந்த சமயம், பு‌‌ஷ்பா என்பவரது வீட்டின் முன்பு சென்று குப்பைகள் இருந்தால் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த பு‌‌ஷ்பா கொஞ்சம் நில்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பின், தனது மகளுடன் 2 தாம்பூலத்தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். இதை பார்த்ததும் வசந்தா ஆச்சரியப்பட்டுள்ளார்.

அவர்கள் கொண்டு வந்த ஒரு தாம்பூல தட்டில் பட்டுப்புடவை, மற்றொரு தட்டில் பூ, குங்குமம், சந்தனமும் இருந்தது.

இதைத் தொடர்ந்து, வசந்தா முன்பு வந்து நின்றதும், பு‌‌ஷ்பா அவரை குப்பை வண்டியை நிறுத்தி விட்டு அதற்கு முன்புறம் வரும்படி கூறினார். என்ன நடக்கிறது என்பதே புரியாத நிலையில் வசந்தா அவர்கள் சொன்னதுபோல வந்து நின்றார். உடனே வசந்தாவின் பாதங்களை தண்ணீரால் கழுவி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைத்த பு‌‌ஷ்பா, மலர்களை தூவி பாத பூஜை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளரின் கழுத்தில் மலர்மாலையையும், பத்து ரூபாய்நோட்டுகள் மாலையையும் அணிவித்தார். பின்னர் அவருடைய நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு அவரை வணங்கி மரியாதை செலுத்தினார். அத்தோடு பட்டுப்புடவையையும் வழங்கினார். அதை அந்த பெண் துப்புரவு பணியாளர் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

எனினும், நடந்தவை எல்லாம் கனவா...நனவா என்று ஒரு மணித்துளி அதிர்ச்சியில் உறைந்துபோன வசந்தா, திடீரென்று தன்னை திக்குமுக்காட வைத்த பு‌‌ஷ்பாவுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் மனிதநேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்