'வேட்டி சட்டைலாம் எப்பவாச்சும்தான்.. வீடியோல இருந்த அவர் நான் இல்லை!'.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வாகை சந்திரசேகர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு விதிகள் சில தளர்வுகளுடன் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்க முயன்ற வீடியோ ஒன்று பரவி வருகிறது. சேலம் - ஓமலூர் சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தர்மபுரி முன்னாள் எம்பி அர்ஜுனனின் காரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, அவர்,  “நான் முன்னாள் எம்பி, என்னிடமே காரை நிறுத்தி விசாரிக்கிறீர்களா?’ என காரில் இருந்து அவர் போலீஸ் அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் புறப்படுவதற்கு தயாராக இருந்த அர்ஜுனன் மீண்டும் கீழே இறங்கி வந்து காவல் அதிகாரியை தள்ளிவிட, பதிலுக்கு காவல் அதிகாரி அவரை தள்ளி விட்டதாகவும், பின்னர் அர்ஜூனன் அந்த காவல் அதிகாரியை உதைத்துவிட்டு வண்டியில் ஏறியதாகவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இதனிடையே அருகிலிருந்த மற்ற அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஈடுபட்டு சமாதானப் படுத்த, அதன் பின்னர் அங்கிருந்து , முன்னாள் எம்.பி காரில் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே அந்த வீடியோவில் இருந்தவர், நடிகரும், வேளச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் என்கிற ஒரு வதந்தி பரவியது.

இதை அறிந்ததும், இதுகுறித்து பேசிய அவர்,  ‘நான் வேட்டி சட்டை போடுறதே எப்பவாச்சும்தான்., பெருமாலும் பேன்ட், சட்டைதான். எனக்குமே இந்த வீடியோ வந்தது. அந்த வீடியோல இருக்கிறவர் அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி, பேரு அர்ஜுனன்.. என் பேரை ஏன் இதுல வந்ததுனு தெரியலை’ என்று தெரிவித்ததோடு, போலீஸில் புகார் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்