'கடன கட்டலன்னா உன் போட்டோ'... 'காதில் கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தை'... 'சிக்கிய 2 சீனர்கள்'... சென்னை காவல்துறை அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாகப் பலரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில், ஆப் மூலம் எளிதாகக் கடன் பெறலாம் என பல்வேறு விளம்பரங்கள் ஆன்லைனில் வலம் வந்தன. இதனை நம்பிய பலரும் அந்த ஆப் மூலமாகக் கடன் பெற்றனர். பொதுவாக வங்கிகள் மூலமாகக் கடன் பெற வேண்டுமானால், கடன் பெறுபவரின் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும், அதன் பின்னர் வங்கி மூலம் வெரிஃபிகேஷன் செய்து அதன் பின்னர் தான் அந்த நபருக்குக் கடன் கொடுக்கப்படும்.

ஆனால் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற ஒரு செல்ஃபி அதோடு கடன் பெறுபவரின் ஆதார் நகல் மட்டுமே போதுமானது ஆகும். ஆனால் அந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்யும் போது தான் பெரிய ஆபத்தே இருக்கிறது. கடன் பெரும் ஆப்களை பதிவிறக்கம் செய்யும் போது, கடன் பெறுபவர் மொபைலில் அனைத்திற்கும் அனுமதியளித்து விடுகிறார். இதன் மூலம் கடன் பெற்ற நபர் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்குச் செல்லும் போது, அவரின் மொபைலில் இருக்கும் அனைத்து எண்ணிற்கும் கடன் பெற்றவர் குறித்து தவறாகச் சித்தரித்து குறுஞ்செய்திகள் அனுப்புவது, அவரை தொடர்பு கொண்டு மிகவும் மோசமாகத் திட்டுவது என அவர்களின் அராஜகம் நீண்டுகொண்ட செல்கிறது.

இந்நிலையில் ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர், மகேஷ் குமார் அகர்வால், ''ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவைச் சேர்ந்த நபர்களுக்குத் தொடர்பு உண்டு. ஆன்லைன் கடன் கொடுத்து டார்ச்சர் தந்த சீனாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், லேப்டாப், செல்போன், இரண்டு வங்கிக்கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடன் வழங்கப் பணம் எங்கிருந்து வருகிறது, எங்கெங்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர், என்று குறிப்பிட்ட ஆணையர், சமூக வலைத்தளங்களில் வரும் லோன் ஆப்பை பயன்படுத்தி கடன் பெறுவது கூடாது. எதிர்பாராத விதமாக சமூக வலைத்தளங்களில் வரும் ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டால் மொபைல் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் பதிவு செய்து கொள்வார்கள்.

கடன் வாங்கியவர்களில் யாரேனும் கடன் தொகையைக் கட்டமுடியவில்லை என்றால் அவர்களின் செல்போனில் இருந்து எடுத்த அனைத்து நபர்களுக்கும் இவரைப் பற்றி தவறாக மெசேஜ் அனுப்புவது, போன் கால் செய்வது போன்று தொந்தரவு செய்வார்கள். அதனால் லோன் அப்ளிகேஷனை பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என'' ஆணையர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்