தேங்கிய மழைநீரால் தெரியவந்த ‘ஆச்சரியம்’.. வியக்க வைத்த 800 ஆண்டு பழமையான ‘சோழர்’ காலத்து கட்டுமானம்.. சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிகள் தீவிரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டு பழமையான சோழர் காலத்து கால்வாய் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் முட்டி அளவுக்கு மழைநீர் புகுந்தது. இதனால் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி கோயிலை ஆய்வு செய்தார். அப்போது, கோயிலில் வடிகால் அமைப்புகள் இருந்தும் தண்ணீர் வெளியேறாதது குறித்து விசாரித்தார். உடனே வடிகால் வழிகளை கண்டறிந்து முழுமையாக சீரமைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து கோயிலின் வடக்கு கோபுரம் அருகே அமைந்துள்ள வடிகால் நீர் வழிப்பாதையை தோண்டும் பணிகள் துவங்கின. அப்போது நடராஜர் கோயிலில் இருந்து திருப்பாற்கடல் குளத்திற்கும், அங்கிருந்து தில்லை காளியம்மன் கோயில் குளத்திற்கும் செல்வதும் கால்வாய் அமைப்பு இருப்பது தெரியவந்தது.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயில், கற்கள் விழுந்து அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கோயிலில் இருந்து ஆங்காங்கே 8 இடங்களில் தோண்டிப் பார்த்தபோது, 4 அடி உயரத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் இருப்பதும், அது நல்ல நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். தொடர்ந்து வழித்தடத்தை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடராஜர் கோவிலில் உள்ள பள்ளமான பகுதியான தெற்கில் இருந்து மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் செல்லுமாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் அகலமாகவும், ஒரு இடத்தில் குறுகலாகவும் என மாறி மாறி வளைவுகளுடன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வேகமாக வெளியேற இந்த அமைப்பை பயன்படுத்தியது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக மழை பெய்து தண்ணீர் கோவிலுக்குள் வந்ததால், சுமார் 800 ஆண்டு பழமையான சோழர்களின் வியக்க வைக்கும் கட்டுமானம் தெரிய வந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்