சாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்து சிதறிய தீப்பொறியால் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் லீமா ரோஸ் (35). இன்று காலை வழக்கம்போல லீமா மளிகை சாமான்கள் வாங்குவதற்காக வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். ஆண்டவர் தெரு ஜங்க்‌ஷன் அருகே அவர் போய்க்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மின் இணைப்புப் பெட்டியின் கேபிளிலிருந்து திடீரென தீப்பொறிகள் பறந்து வந்து சாலையில் விழுந்துள்ளது. இதில் லீமா மீதும் சில தீப்பொறிகள் விழ, அவர் அணிந்திருந்த நைட்டி நைலான் துணி என்பதால் தீ வேகமாக உடையில் பரவியுள்ளது.

நொடிகளில் நடந்த இந்த பயங்கரத்தால் அதிர்ச்சியடைந்த லீமா என்ன செய்வதெனத் தெரியாமல் ஓட, காற்றின் வேகத்தால் தீ மேலும் பரவி நைலான் துணி அவருடைய உடலில் ஒட்டிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருடைய உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 79 சதவீதம் தீக்காயமடைந்த லீமா ஆபத்தான கட்டத்தை கடக்காமலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள தீயணைப்புத் துறையினர், “உயிரிழந்த பெண் அணிந்திருந்த நைலான் நைட்டியாலேயே தீ வேகமாகப் பரவி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே அவர் காட்டன் உடை அணிந்திருந்தால் காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கும். அதேபோல, உடலில் தீப்பிடித்தால் பயந்து ஓடவும் கூடாது. அப்படி ஓடினால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிகமாக கிடைத்து தீ மேலும் வேகமாகப் பரவும். தீ பற்றினால் உடனே தரையில் படுத்து உருண்டுவிட்டால் ஆக்சிஜன் தடைப்பட்டு தீ அணைந்துவிடும்” எனத் தெரிவித்துள்ளனர். சாலையில் சாதாரணமாக நடந்து சென்ற பெண் மீது தீப்பொறி பட்டு ஏற்பட்ட தீவிபத்தில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, FIREACCIDENT, CHENNAI, CHOOLAIMEDU, WOMAN, ELECTRICTRANSFORMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்