'கடைசியா இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரி'... 'இப்போ வர அது ஆக்டிவா இருக்கு'... நொறுங்கி போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2020 முடியும் தறுவாயில் இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு அதிர்ச்சி செய்தியைத் தமிழக சின்னத்திரை ரசிகர்கள் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை சித்ரா, தொகுப்பாளினியாகத் தனது திரைத்துறை பயணத்தைத் தொடங்கினார். மாடலிங், டான்சர், பாடகர், உளவியலாளர், என பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொண்ட அவர், படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்றார். இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா, அந்த கதாபாத்திரமாகவே பலரது மனதில் பதிந்து போனார்.

இந்நிலையில் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவருக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நாசரேத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவருடன் ஹேம்நாத்தும் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை, நடிகை சித்ரா ஓட்டல் அறையிலிருந்து தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனிடையே சித்ரா 12 மணி நேரத்துக்கும் முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சுமார் 41 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. அதேபோன்று அவருடன் சூட்டிங்யில் இருந்த நடிகை சரண்யா அவருடன் எடுத்த வீடியோ ஒன்றையும் ஸ்டோரியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த ஸ்டோரியும் இன்னும் ஆக்டிவாக உள்ளது. இப்படி இரவில் மகிழ்ச்சியாக போட்டோவும், ஸ்டோரியையும் பகிர்ந்த சித்ரா அதிகாலையில் தற்கொலை என்ற கொடுமையான முடிவை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

சித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். சித்ராவின் தமிழ் உச்சரிப்பும், அவரின் துரு துரு குணமும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாகும். அப்படிப் பட்ட சித்ராவை இனிமேல் எப்போது காண்போம் எனப் பலரும் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக  போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள், நிர்வாகத்தினர், சித்ரா அறையில்  ஹேம்நாத் உள்ளிட்ட பலரிடமும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகே அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்