டிராஃபிக் சிக்னலில்... ரெட் லைட்டை தாண்டினால்... சில விநாடிகளிலேயே வேட்டு!.. காவல்துறை அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும், அங்கே காவலர்கள் இல்லை என்றால் எல்லை மீறும் வழக்கம் நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. இதுபோன்ற விதிகளை மீறுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது.

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் நிறுத்துக் கோட்டுக்கு முன்னதாக நிற்க வேண்டும் என்பது சாலை விதி. நம்மில் பெரும்பாலானோர் இந்த விதியை அங்கு காவலர்கள் இருந்தால் மட்டுமே பின்பற்றுகிறோம்.
காவலர்கள் இல்லாவிட்டாலும் சிவப்பு விளக்கை தாண்டுவோர், சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்குவோர், ஹெல்மெட் அணியாதவர்கள் உள்ளிட்ட வீதி மீறல்களில் ஈடுபடுவோரை கண்டுப்பிடித்து தண்டிப்பதற்காக புதிய திட்டத்தை வகுத்தது சென்னை போக்குவரத்து காவல்துறை.

முதல்கட்டமாக, அண்ணாநகர் ரவுண்டனா, அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டனா, சாந்தி காலனி சந்திப்பு, 100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டிப்போ மற்றும் 18வது சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்திய லிமிடெட் நிறுவனத்துடன் ஓருங்கிணைந்து 61 ஏஎன்பிஆர் என்ற அதிநவீன கேமராக்கள் நிறுவப்பட்டன.

5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக படம் பிடித்து, கட்டுப்பாட்டறையில் கண்காணிக்கப்பட்டு, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிமீறல் குறித்த செலான்கள் தபால்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது National Informatics Centre எனப்படும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து, இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தொடக்கிவைத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், நவீன திட்டம் மூலம், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் செலான்கள் அனுப்பலாம் என்றார்.

சென்னையில் உள்ள 1,700 போக்குவரத்து சந்திப்புகளிலும் அதிநவீன கேமரா வசதியை ஏற்படுத்த சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. தெளிவாக தெரியாத வாகன எண்கள், மோசமான வானிலையால் வாகன எண்கள் தெரியாதது, வேறு நபரின் பெயரில் உள்ள வாகனங்கள் போன்ற சில நடைமுறை சிக்கல்களும் இத்திட்டத்தில் உள்ளன.

ஒவ்வொரு விதிமீறலும் கண்காணிக்கப்பட்டு, சட்டத்தின் முன் கொண்டுவரும் இந்த நவீன திட்டத்தின் மூலம் சென்னையில் போக்குவரத்து விதிமீறல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்