'இது சென்னை மக்களோட எமோஷன்ல கலந்தது'... 'புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும்?'... வெளியான தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பல விஷயங்கள் சென்னை மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்து ஆகும். அந்த வகையில் சென்னை புறநகர் ரயில் பலரின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். காலையில் எழுந்து அரக்கப்பரக்க ஓடி வந்து, ரயிலைப் பிடித்து, ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து, காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு அதில் பயணிப்பது என்பது அலாதியான ஒரு சுகமே.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்தச்சூழ்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3 ஆயிரத்து 300 பேருந்துகள் உள்ள நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் 2 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அப்போது நாள்தோறும் சுமார் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தச்சூழ்நிலையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதாக ரயில்வேத் துறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், ''சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க இருக்கிறது. அப்படித் தொடங்கும்போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கப் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இது குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருக்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மின்சார ரயில்கள் இல்லாததால், ஆவடி, அம்பத்தூர் போன்ற புறநகர்ப் பகுதிகளுக்குக் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், இதன்மூலம் தினசரி பேருந்து பயணிகளின் எண்ணிக்கை 11 லட்சமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்