சென்னையில் திடீர் திருப்பம்!.. வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு ஒத்துப்போகும் 'விஷயம்' கண்டுபிடிப்பு!.. களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை.. அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் கொரோனா வேகமாக பரவுவதால் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் கொரோனா வைரசின் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட அதிக நெரிசல் காரணமாகவே அங்கிருந்து வைரஸ் வேகமாக பரவியது. இதையடுத்து சென்னையில் உள்ள மக்கள் நெருக்கம் அதிகமான குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் தென்சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அதிகரித்து வருகிறது.

சென்னை கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அது படிப்படியாக உயர்ந்து தற்போது 25 பேர் வரையில் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தூய்மை பணியாளர் ஒருவர் மூலமாகவும், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர் மூலமாகவும் கண்ணகி நகர் குடியிருப்பில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியுள்ளது.

கண்ணகி நகர் பகுதி குறுகலான, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளதால் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுபோன்று செம்மஞ்சேரியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பிலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

செம்மஞ்சேரி குடியிருப்பில் பெரும்பாலான வீடுகள் 220 சதுரடி பரப்பளவு கொண்டவையாகும். இங்கு சிறிய வீட்டில் 4 பேர் அல்லது 6 பேர் வரையில் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக செம்மஞ்சேரியிலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

இதன்பிறகு செம்மஞ்சேரியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. செம்மஞ்சேரி குடியிருப்பிலும் இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு தூய்மை பணியாளர் ஒருவருக்கு முதலில் கொரோனா அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாக்கத்தில் 35-க்கும் மேற்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் அருகருகே அமைந்துள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 தளங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் வைரஸ் பரவலை தடுக்க இந்த 3 குடியிருப்புகளிலும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மை பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த 3 குடியிருப்புகளிலும் தீவிர கவனம் செலுத்தி நோய் பரவல் அதிகரிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்