'நீங்க தான் அந்த லக்கி வின்னர்!'... '350 ரூபாய்க்கு வாங்கிய போர்வை!.. பம்பர் பரிசு அறிவிப்பு'!.. Cash-ஆ? Car-ஆ?.. வாடிக்கையாளர் 'செம்ம' ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ், ஓஎம்ஆர் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி Snap Deal ஆன்லைன் நிறுவனத்தில் 350 ரூபாய் மதிப்புள்ள போர்வையை ஆர்டர் செய்து பெற்றுள்ளார். அதன்பின், 20 நாட்களுக்கு பின்னர் சுரேஷ் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர் SHOPCLUES.COM என்ற நிறுவனத்தில் இருந்து உதவி மேலாளர் சுஜித் பேசுவதாக கூறியுள்ளார். ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மகேந்திரா எக்ஸ்யூவி 500, கார் பரிசு விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சுரேஷின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தான் பணிபுரியும் நிறுவன அடையாள அட்டை, பம்பர் பரிசில் விழுந்துள்ள காரின் அலங்காரம் செய்யப்பட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளார். காரை பெற அதன் மதிப்பில் ஒரு சதவீதம் வரி கட்ட வேண்டும் என்றும், 12,800 ரூபாயை அனுப்புமாறு கூறி மோசடி நபர் வங்கி கணக்கு எண்ணை அனுப்பியுள்ளார்.

கார் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம், இல்லை என்றால் பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பாத சுரேஷ் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர்கள் ஐயப்பன், கார்த்திகேயனிடம் வாட்ஸ் ஆப்பில் வந்த புகைப்படங்களை காண்பித்துள்ளார்.

தன்னிடம் பேசிய நபரின் தொலைபேசி எண்ணை அழைத்து, அதை உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். போலீஸ் பேசுவதை அறிந்த மோசடி நபர், இணைப்பை துண்டித்துவிட்டு அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுபோன்ற மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஏற்கெனவே பலமுறை செய்திகளை பார்த்ததால் தான் உஷாராகி போலீசாரை அணுகியதாக தெரிவித்துள்ளார் சுரேஷ். பரிசு, குறைந்த விலைக்கு கார், என போனில் தொடர்பு கொள்ளும் மோசடி நபவர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்