'இப்போ வாங்க...' 'முடிஞ்சா வந்து புடிங்க பாப்போம்...' 'கீழ கூவம், பாலத்துல நின்னு திருடன் போட்ட பிளான்...' - நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதியவரின் செல்போனை பிடுங்கி கூவத்தில் குதித்த இளைஞரை, காவலர் ஒருவரும் கூவத்தில் குதித்து பிடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மாம்பலத்தை 63 வயதான ரவிக்குமார் என்ற முதியவர் ஒருவர் சென்னை எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள மேம்பாலம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம இளைஞர் முதியவரை பின் தொடர்ந்து வந்து கத்தி முனையில் அவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை காவல் ஆணையரின் உதவியாளராக பணிபுரிந்து வரும் காவலர் கவின் முதியவரிடம் செல்போன் பரித்து சென்ற சம்பவத்தை கண்டு விரட்டியுள்ளார்.

காவலர் பின்தொடர்வதை கண்ட அந்த இளைஞர், வேகமாக ஓடி, அருகிலிருந்த நாற்றமடிக்கும் கூவத்தில் குதித்துள்ளார். காவலர் தன்னை இனி பின் தொடர முடியாது என திரும்பி பார்க்கையில், காவலர் கவின் தீபக்கும் கூவத்தில் குதித்துள்ளார்.

இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து கூடுதல் காவலர்களை அழைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீசார், அந்த இளைஞரை பிடித்து எழும்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் கொள்ளையன் கண்ணகி நகரை சேர்ந்த சேகர் என்ற சிந்துபாய் என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கெனவே பல செல்போன் பறிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த அதிரடி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவலர் கவினின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டியும் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்