‘அவசியமில்லாமல் வெளியே வராதீங்க’!.. 100-க்கும் மேற்பட்ட சோதனை சாவடி.. தீவிர கண்காணிப்பில் சென்னையின் முக்கிய பகுதிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் காலை 6 மணி முதல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதிகளவில் வெளியில் நடமாடியதால், காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அவசர பயணத்துக்கு செல்வோரும் இதை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் தங்கள் சரக காவல் நிலைய எல்லையை தாண்டி வெளியே சென்றாலும் இ-பதிவு அவசியம் என காவல்துறை இன்று அறிவித்தது. மேலும் அவசியமின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதற்காக சென்னையில் சுமார் 153 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா சாலை, வடபழனி, போரூர், அடையாறு, மத்திய கைலாஸ் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீதும், இ-பதிவு செய்யாமல் பயணம் செய்வோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்