'பொண்ணுங்க மத்தியில ரோமியோ'... 'பேஸ்புக்' மூலம் பழகி '9 கோடியை'... 'அபேஸ் செய்த பலே ஆசாமி' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமண ஆசை காட்டி பெண்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2016-ம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவ அதிகாரிக்கு, சக்கரவர்த்தி என்ற இளைஞர் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். தான் ஒரு மருத்துவர் என்றும் திருவண்ணாமலையை பூர்விகமாக கொண்ட நான், அமெரிக்காவில் மருத்துவராக பணி புரிவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அதிகாரியும் அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து தான் இந்தியா வர இருப்பதாகவும்,வந்தவுடன் உங்களை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே இந்தியா வந்த சக்கரவர்த்தி, அந்த பெண்ணை சென்று சந்தித்திருக்கிறார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர், தனது தயார் இறந்து விட்டதால்,ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அதோடு இங்கு ரியல்  எஸ்டேட் தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைபடுவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் அதிகாரி 'எப்படியும் நான் திருமணம் செய்து கொள்ளும் நபர் தானே' என நினைத்து, 6 கோடியே 90 லட்ச ரூபாயை சக்கரவர்த்திக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணம் தனது கைக்கு வந்ததும்,  சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டார். அப்போது தான், தன்னை சக்கரவர்த்தி ஏமாற்றியது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,சக்கரவர்த்தி திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் என்பதும் சரவணன், அஜய், விஜய்குமார், வித்யூத் போன்ற போலி பெயர்களில் திருமணமாகாத மற்றும் கணவரை இழந்த பெண்களை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சக்கரவர்த்தி முதலில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் மூலம் பெண்களிடம் பழகி அவர்களின் நன்மதிப்பை பெறுவார். அதன் பிறகு அவர்களின் பின்னணியை தெரிந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதே போல் 9 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் 9 கோடி ரூபாய் மோசடி செய்து ஆடம்பர பங்களாக்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்கரவர்த்தியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமண இணையத்தளங்களில் வரன் தேடும் போது, பெண்கள் மிகவும் எச்சரிக்கையோடு  இருக்க வேண்டும் என, காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

POLICE, CHENNAI, MARRIAGE INFORMATION, DEFRAUDING, CHENNAI CITY POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்