நொடியில் பறந்து போன கோழி... புதுவீட்டுக்கு திருஷ்டி கழிக்கச் சென்ற தொழிலாளி பலி .!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் புதுவீட்டுக்கு கிரக பிரவேசம் நடைபெற இருந்த நிலையில் அந்த வீட்டிற்கு திருஷ்டி கழிக்க சென்ற முதியவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக புதுமனை புகுவிழாவின் போது, கோழி, ஆடு ஆகியவற்றை பலிகொடுப்பதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சென்னையில் புதுவீட்டுக்கு திருஷ்டி கழிக்க சென்ற தொழிலாளி மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.  பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பிரபல கட்டுமான நிறுவனம் கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா நடத்த உரிமையாளர் திட்டமிட்டிருக்கிறார். இதனையடுத்து இன்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 70) என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஊதுபத்தி, சூடம், கோழி ஆகியவற்றுடன் வீட்டுக்கு சென்றிருக்கிறார் அவர். அப்போது, அவரது கையில் இருந்த கோழி பறந்து சென்றதாக தெரிகிறது. அதை பிடிக்க ராஜேந்திரன் முயற்சிக்கும்போது லிப்ட் அமைக்க வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் விஷயம் அறிந்து இதுகுறித்து சங்கர் நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ராஜேந்திரன் உடலை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை துவங்கியிருக்கின்றனர். புதுவீட்டுக்கு திருஷ்டி கழிக்க சென்ற தொழிலாளி துரதிருஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, HOME, HOUSEWARMING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்