'சென்னை வந்த சாப்ட்வேர் என்ஜினீயர்'...'நவீன கருவி மூலம் சோதனை'...விமான நிலையத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரேசிலிலிருந்து துபாய் வழியாகச் சென்னை வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் சென்னை வரும் பயணிகள், விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் தமிழக சுகாதாரத் துறை துரித கதியில் செயல்பட்டு வருகிறது. இதற்காகச் சிறப்பு மருத்துவ குழுவினர் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்குப் பிரேசிலிலிருந்து துபாய் வழியாக விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளைச் சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிரமாகப் பரிசோதனை செய்தனர். அப்போது பிரேசிலில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் சென்னை கீழ்க்கட்டளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. அதில் அந்த இளைஞருக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பரபரப்பு அடைந்த மருத்துவ அதிகாரிகள், இது கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால், அந்த இளைஞர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

CHENNAIAIRPORT, CHENNAI, CORONA VIRUS, IT ENGINEER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்