“4500 ரூபா போச்சு.. நிறைய பேர ஏமாத்துறாங்க!”.. ‘வீட்டு வேலைக்கு’ ஆள் தேடிய ‘ஐடி ஊழியருக்கு’ பெண் கொடுத்த ‘ஷாக்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி முதல் அவென்யூவில் வசித்து வரும் அசோக்ராஜ் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்து வரும் இவர் சென்னை அடையாறு துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் சென்னை நகர வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன்னுடைய வீட்டில் வேலை செய்ய ஒரு பெண் தேவைப் பட்டதாகவும், அதனால் சென்னை மேன்பவர் ஏஜென்சி மூலம் வீட்டு வேலைக்கு பெண் தேடியதாகவும் அப்போது மேன்பவர் ஏஜென்சியை சேர்ந்த அமுல் என்பவரிடம் போனில் பேசி வீட்டு வேலை தொடர்பான தகவல்களை கூறியதாகவும் அதற்கு டெபாசிட் தொகையாக 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்ட பின்பு அமுல் கூறியது போல் வீட்டு வேலைக்கு வருவதாக கூறிய பெண் வரவில்லை. இது குறித்து அவரிடம் போனில் கேட்ட போது வீட்டு வேலைக்கு வரும் பெண் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றதாகவும், அதனால் சோதனை முடிந்து அவர் வருவார் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்பெண் வரவில்லை, மீண்டும் அவருக்கு போன் செய்து வீட்டு வேலைக்கு இன்னும் ஆள் வரவில்லை என தெரிவித்திருக்கிறார் அசோக்ராஜ். அப்போது மீண்டும் அப்பெண் தன்னுடைய மகளை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அதனால் பிறகு பேசுகிறேன் என்று போனை துண்டித்துள்ளார்.

இப்படி 10 தடவைக்கு மேல் அப்பெண்ணுக்கு போன் செய்த அசோக்ராஜ்க்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஒருகட்டத்தில் அசோக்ராஜின் செல்போனை பிளாக் செய்திருக்கிறார். அதன்பிறகு அமுல் என்பவரின் செல்போன் நம்பரை தனக்கு தெரிவித்த இணையதளத்திடம் அசோக்ராஜ் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சம்பந்தப்பட்ட மேன்பவர் ஏஜென்சியை நடத்துவதாக கூறும் அவர் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபற்றி பேசிய அசோக்ராஜ், தன்னை மட்டுமல்ல தன்னை போல பலரையும் இந்த ஏஜென்சி ஏமாற்றியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்  இணையதளத்தில் தகவல் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் 4 ஆயிரத்து 500 ரூபாய்தான் இழப்பு என்பதால் யாரும் புகார் அளிக்க முன்வராமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தன்னைப் போல மற்றவர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீசார் கூறுகையில் அசோக்ராஜ், அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் வீட்டு வேலைக்கு ஆள் தேடுபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த பிறகே வேலைக்கு சேர்க்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்