சேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்கு சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் எதிர்த்தனர். பல்வேறு தீவிரப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்துக்கு தடைக் கேட்டும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை கடந்த 8 மாதங்களாக, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல்  கிடைத்தப் பிறகுதான் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும், தற்போது நில அளவீடு பணி மட்டுமே நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. 

கடந்த டிசம்பர் 14-ம் தேதி இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று காலை எட்டு வழிச் சாலைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.

இதுபற்றி விவசாயி தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறும் போது, 'இந்தத் திட்டத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்துசெய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.  வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வந்து, சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை வழங்கவேண்டும். மத்திய சுற்றுச் சூழல் அனுமதி பெற்றபின் தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்' எனக் கூறினார்.

இந்தத் திட்டத்திற்கு புதிதாக அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பட்டாசு வெடித்து விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். 

HIGHWAY, PROJECT, SALEM, CHENNAI, GREENCORRIDOR, HIGHCOURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்