‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பேருந்து நடத்துநர் தவறாகப் பேசியதால் இளம் பெண் ஒருவர் பேருந்தை நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பூஜா என்பவர் நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவருடன் வில்லிவாக்கம் செல்வதற்காக 27D பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் டிக்கெட் எடுப்பதற்காக பணத்தைப் பார்த்தபோது அவர்களிடம் தேவையானதை விட 10 ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து நடத்துநரிடம் பூஜா, “பணம் குறைவாக இருக்கிறது. நான் மட்டும் பேருந்தில் செல்கிறேன். என்னுடைய நண்பர் இறங்கிக் கொள்வார்” எனக் கூறியுள்ளார். 

இதை ஏற்க மறுத்த நடத்துநர் டிக்கெட்டைக் கிழித்துவிட்டதாகவும், பணம் கொடுத்துவிட்டுத்தான் இறங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தம் வர பூஜாவின் நண்பர் இறங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பேருந்திலிருந்த பூஜாவிடம் நடத்துநர், “காதலனுடன் சுற்றத் தெரிகிறது டிக்கெட் வாங்க பணம் இல்லையா” என ஒருமையில் மரியாதையின்றி பேசியதாகக் கூறப்படுகிறது.

அதற்குள் பணம் எடுக்க இறங்கிய நண்பர் ஆட்டோ பிடித்து வந்து மீண்டும் பேருந்தில் ஏறி 2 டிக்கெட்டுகளுக்கும் சேர்த்து 500 ரூபாயைக் கொடுத்துள்ளார். அதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த நடத்துநர் பூஜாவையும், அவருடைய நண்பரையும் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த பூஜா நேராக ஓட்டுநர் அருகில் சென்று கியர் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பேருந்தை எடுக்கவிடாமல் செய்துள்ளார். இறங்க வேண்டும், கதவைத் திறங்கள் என பூஜா வாக்குவாதத்தில் ஈடுபட ஓட்டுநருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கதவு திறக்கப்பட்ட பின் பேருந்தின் முன் வந்து நின்ற பூஜா, “என்னைத் தவறாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் பேருந்தை காவல் நிலையத்திற்கு விடுங்கள்” என ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அருகிலிருந்த போக்குவரத்து காவலர் வந்து சமாதானப்படுத்தியும் பூஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். பின்னர் அந்தப் பேருந்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சமரசம் ஏற்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

CHENNAI, MTC, BUS, CONDUCTOR, DRIVER, GIRL, FIGHT, GEAR, VIDEO, TICKET, FARE, BOYFRIEND, MONEY, VILLIVAKKAM, 27D

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்