‘அந்த QRcode-அ ஸ்கேன் பண்ணுங்க’.. பழைய கட்டிலை விற்க முயன்ற சென்னை இன்ஜினீயரை அதிரவைத்த ‘ஆன்லைன்’ மோசடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை இன்ஜினீயர் ஒருவர் பழைய கட்டிலை ஆன்லைனில் விற்க முயன்று பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். இவர் கப்பற்படையில் மூத்த பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரேம் ஆனந்த் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வீட்டிலிருந்த பழைய கட்டிலை விற்க இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதைப் பார்த்த வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு கட்டிலை வாங்குவதாக தெரிவித்துள்ளார். கட்டிலுக்கான பணத்தை ஆன்லைனில் அனுப்ப QRcode ஒன்றை பிரேம் ஆனந்தின் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பியுள்ளார்.

அதை முதல் தடவை ஸ்கேன் செய்தபோது கட்டிலை வாங்க விருப்பம் தெரிவித்தவர் அனுப்பிய 10 ரூபாய் பிரேம் ஆனந்தின் வங்கி கணக்குக்கு வந்துள்ளது. அதனால் நம்பிக்கையுடன் அந்த நபர் அனுப்பிய மற்றொரு QRcode-ஐ ஸ்கேன் செய்துள்ளார். அப்போது பிரேம் ஆனந்தின் வங்கி கணக்கில் இருந்த ரூ.50,000 பணம் அந்த நபரின் வங்கி கணக்குக்கு சென்றுள்ளது. உடேன அந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம் ஆனந்த் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ஊரடங்கு காலத்தில் நூதன ஆன்லைன் மோசடிகள் சம்பவம் அதிகமாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். சென்னை பிரேம் ஆனந்த்தை ஏமாற்றிய நபரின் பின்னணில் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பல் ஆன்லைனில் பழைய பொருட்களை விற்க விளம்பரம் செய்பவர்களிடம் முதலில் போனில் பேசுகின்றனர். அப்போது தங்களை இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதை போல அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். அதை உறுதிப்படுத்துவதற்காக பிரதமர் மோடியிடமிருந்து விருது வாங்குவதுபோன்ற போலியான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைப்பார்கள். அதன்பின்னர் தங்களது சுயரூபத்தை காட்டுவார்கள். இதேபோல் தான் சென்னை இன்ஜினீயர் பிரேம் ஆனந்தையும் ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் QRcode மூலம் சென்னை இன்ஜினீயரிடம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்