'230கிமீ நீர் வழிப்பாதை'...'நம்ம சென்னையில் கொசுத் தொல்லை இருக்காது'... சென்னை மாநகராட்சி அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல தனியத்தொடங்கியுள்ள நிலையில், சில தினங்களில் பருவமழை தொடங்கவுள்ளது.

சென்னையின் மிகப்பெரிய பிரச்சனையாக எப்போதும் இருப்பது கொசுத் தொல்லை. அதிலும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் கொசுக்களின் ராஜாங்கம் தான். தற்போது அந்த பிரச்சனையைத் தீர்க்க சுமார் 230கிமீ நீர் வழிப்பாதையில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது சென்னை மாநகராட்சி. முதன் முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல தனியத்தொடங்கியுள்ள நிலையில், சில தினங்களில் பருவமழை தொடங்கவுள்ளது.  மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு, காலரா போன்ற காய்ச்சல் பரவத்தொடங்கிவிடும். அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் தாக்கத்தின் வீரியம் சற்று மிகுதியாகவே காணப்படும். இந்நிலையில் பருவ மழைக்கு முன்னதாகவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சென்னை மாநகராட்சி.

சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம்,  போன்ற பிரதான நீர் வழிப்பாதைகளோடு சிறிதும் பெரிதுமாக இணைப்பு கால்வாய்கள் சுமார் 230கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பருவ மழைக்கு முன்பு முன்னெச்சரிக்கையாகக் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். கொசு மருந்து தெளிப்பதற்கு முன்பு மருந்து தெளிக்கத் திட்டமிடும் நீர் வழிப்பாதைகளில் மூன்று இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லார்வா புழுக்களின் அடர்த்தியை கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் MLO எனப்படும் கொசுப் புழு நாசினி தெளிக்கப்படும்.

வழக்கமாக இந்த பணிகள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து மேற்கொள்ளும் நிலையில் இம்முறை முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. அண்ணா பல்கலை கழகத்தோடு இணைந்து 3 ஆள் இல்லா விமானம் மூலம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சோதனை அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஆள் இல்லா விமானங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் மாநகராட்சி ஊழியர்களும் இதே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்களால் செல்ல முடியாத இடங்களுக்கும் ஆள் இல்லா விமானங்கள் மிக எளிதாகச் சென்று கொசு மருந்து தெளிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மற்ற செய்திகள்