'இன்றைக்கு சேதுவோட பிறந்த நாள்'... 'அவர் நினைவா இத செஞ்சு இருக்கோம்'... மருத்துவர் அஷ்வின் விஜய்யின் நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவரும், நடிகருமான மறைந்த சேதுராமன் குறித்து அவரது நெருங்கிய நண்பர் மருத்துவர் அஷ்வின் விஜய் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சேதுராமன்.  இவர் கடந்த மார்ச் 26ம் தேதி மாரடைப்பால் காலமானார். நடிகராக மட்டுமன்றி, தோல் சிகிச்சை மருத்துவராகவும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். மிக இளம் வயதில் மருத்துவர் சேதுராமன் காலமான செய்தி திரையுலகை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். மார்ச் மாதம் கொரோனா ஆரம்பித்த நேரத்தில், மக்களுக்குப் பல தகவல்கள் பதிவிட்டு வந்தார். கொரோனா குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், நாம் பாதுகாப்புடன் இருந்தால் கொரோனாவை வெல்லலாம் என மக்களுக்கு நம்பிக்கையூட்டும் பல தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே வந்தார். 

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமனின் திடீர் மரணம் அவரை நிலைகுலையச் செய்தது. கடந்த 2016-ம் ஆண்டு உமையாள் என்பவரை சேதுராமன் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சகானா என்ற பெண் குழந்தை இருக்கிறது. சேதுராமன் மரணமடையும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில்,  சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

அதனால் மீண்டும் சேதுராமனே குட்டி சேதுவாக வந்திருப்பதாக குடும்பத்தினர் மட்டுமல்லாது பலரும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மறைந்த சேதுராமன் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி அந்த மருத்துவமனையின் பொறுப்புகளை எடுத்து நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று அவரின் பிறந்த நாளில் சென்னை இசிஆர் பகுதியில்  சேதுராமன் நினைவாக Zi Clinicயின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளதாக, மருத்துவரும் சேதுராமனின் நெருங்கிய நண்பருமான அஷ்வின் விஜய் பதிவிட்டுள்ளார். இது அவரின் நினைவாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், சேதுராமனின் குடும்பத்தினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்