‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்சனைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பள்ளி சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் அலட்சியத்தால் தொண்டையில் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ (9). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜஸ்ரீயின் காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி இருந்துள்ளது. இதனால் அருகில் உள்ள அரசு உதவிபெறும் மருத்துவமனையில் மகளை சேர்ந்துள்ளனர். அங்கு ராஜஸ்ரீயை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த மகளின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் பெற்றோர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வேறொரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சையை தவறுதலாக சிறுமிக்கு செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் வருங்காலத்தில் சிறுமியின் தொண்டையில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, அதற்கு தகுந்த இழப்பீடு கிடைக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுமியின் காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு பதிலாக தொண்டையில் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, AMBATTUR, DOCTORS, GIRL, OPERATION, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்