"அம்மாவுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு!.. நான் தான் நாப்கின் மாத்திவிட்டேன்!".. கொரோனா வார்டில் தாய் மகன் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று ஏற்பட்ட தாயை உடனிருந்து கவனித்துக் கொண்ட ஒரு மகனின் அனுபவத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர். ஷ்யாம் சுந்தர். கல்லூரி இறுதியாண்டு பொறியியல் மாணவர். இவர், தன் அம்மாவைக் கொரோனாப் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார்.

"என் அம்மாவுக்கு ஏற்கெனவே இருந்த உடல்நிலைக் கோளாறுகளால் சரியா நடக்க முடியாது. பாத்ரூம் போகக்கூட மத்தவங்களின் உதவி வேணும். இந்த நிலைமையிலதான் கொரோனாத் தொற்றும் ஏற்பட்டுச்சு. ஒரு நாள் நைட்டு முழுக்க அம்மா மூச்சுவிட முடியாமத் தவிச்சுட்டு இருந்தாங்க. நானும் அம்மாகூடவே விடிய விடிய முழிச்சிட்டிருந்தேன்.

மறுநாள் காலையில அம்மாவை பைக்ல உட்காரவெச்சு என்னோட சேர்த்துக் கயிற்றால கட்டிக்கிட்டு ஹாஸ்பிட்டல் போனோம். அம்மாவுக்குக் கொரோனா டெஸ்ட் எடுத்ததில், பாசிட்டிவ். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சோம்.

அம்மாவை என்னால தான் பாத்ரூமுக்குத் தூக்கிட்டுப் போக முடியும்ங்கிறதால நானும் ஹாஸ்பிட்டல்ல தங்கிட்டேன். கொரோனா ட்ரீட்மென்ட், கூடவே மூச்சுப்பயிற்சி, கால்களுக்கு மசாஜ்னு கொடுத்தாங்க.

ஒரு நாள் ராத்திரி அம்மாவுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு. 'நைட்டி நனைஞ்சிடும்டா கண்ணு'ன்னு அம்மா சொன்னப்போ, பக்கத்துல எந்த நர்ஸும் இல்ல. நானே அம்மாவுக்கு நாப்கின் வெச்சுவிட்டேன். அதுக்கப்புறம் மூணு நாளும் நானே நாப்கின் வெச்சு அம்மாவைப் பார்த்துக்கிட்டேன். இப்போ அம்மாவுக்குக் கொரோனா நெகட்டிவ்... நல்லாருக்காங்க" என்கிறார் நிறைவாக.

இதுவரை செய்திகளில் எண்களாகப் படித்து, பார்த்துக்கொண்டிருந்த கோவிட்-19 தொற்றாளர்கள், இப்போது அக்கம் பக்கம், நட்பு, உறவு என நம் வட்டத்துக்குள் தெரிய ஆரம்பித்திருக்கிறார்கள். இது அச்சத்தை நெருக்கமாக உணரவைக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா வந்து மீண்டவர்களும், அவர்களை மீட்டெடுத்த அவர்களின் குடும்பத்தினரும், கொரோனாவுக்கு எதிரான தற்போதைய நம் நம்பிக்கைக் கீற்றுகளாகியிருக்கிறார்கள்.

Credit: Vikatan

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்