‘இனிமேல் இங்கெல்லாம் போஸ்டர் ஒட்டாதீங்க’!.. சென்னை மாநகராட்சி கையிலெடுத்த ‘அதிரடி’ திட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிங்கார சென்னை திட்டத்தின் முதல் நடவடிக்கையாக பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணியின் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

‘இனிமேல் இங்கெல்லாம் போஸ்டர் ஒட்டாதீங்க’!.. சென்னை மாநகராட்சி கையிலெடுத்த ‘அதிரடி’ திட்டம்..!

சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு கட்டடங்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

Chennai Corporation starts removing posters from public places

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது. சென்னை மாநகரை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஶ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிபூண்டி போன்ற தொழில் நகரங்களும், வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது.

Chennai Corporation starts removing posters from public places

மேலும், ஆசியாவின் மிக நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரையும் சென்னையில் அமைந்துள்ளது. வர்த்தக தொழில் ரீதியாகவும், நிர்வாக அலுவல்கள் ரீதியாகவும் சர்வதேச அளவில் முக்கிய நகரமாக விளங்கும் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள், குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்