'சீஸன் டிக்கெட் எடுத்து கைவரிசை'...'கடற்கரை, தாம்பரம் ரயில் தான் டார்கெட்'...சிக்கிய 'கல்லூரி மாணவி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மின்சார ரயிலில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நேரத்தில் தங்களின் உடமைகள் திருட்டுப் போனதாகப் பயணிகள் புகார்கள் கொடுத்தனர். ஆனால் மகளிர் பெட்டிகளில் பயணம் செய்யும் பெண்கள் தான் இது தொடர்பாக அதிகமான புகாரை அளித்தார்கள். இதையடுத்து இந்த தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க ரயில்வே போலீசார் புதிய வியூகத்தை வகுத்தனர்.

அதன்படி கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வழித்தடத்தில்,  ரயில்வே பெண் போலீஸார், சீருடை அணியாமல் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இளம்பெண் ஒருவரின் வித்தியாசமான நடவடிக்கை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அப்போது இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த அந்த பெண், நின்றுகொண்டிருக்கும் பெண்களிடம் `உங்களின் ஹேண்ட் பேக்கைக் கொடுங்கள் எதற்கு கஷ்டப்படுகிறீர்கள் என அன்பாக கேட்டு வாங்கி வைத்து கொண்டார்.

இதையடுத்து யாராவது பார்க்கிறார்களா என சுற்றி பார்த்துக்கொண்டு, ஹேண்ட் பேக்கில் இருக்கும் பர்ஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்ததை போலீஸார் பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்த காவல்துறையினர், ரயில்வே காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது விசாரணையில் அந்த பெண் தெரிவித்த தகவல்கள் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்தது.

அந்த பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்றும் தாம்பரம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பை படித்து வருவதும் தெரியவந்தது. மோகனப்பிரியா கல்லூரிக்கு காலையில் கடற்கரை - தாம்பரம் வழித்தட மின்சார ரயிலில் செல்வது வழக்கம். இதனால் சீஸன் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வந்த அவர், கல்லூரி மாணவி என்பதால் டிப்டாப்பாக உடை அணிந்து வந்துள்ளார்.

மகளிர் பெட்டியில் ஏறும் மோகனப்பிரியா, பார்ப்பதற்கு இளைமையான தோற்றம், மற்றும் உதவி செய்வது போல பேசுவதால் யாருக்கும் இவர் மீது சந்தேகம் வரவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர், இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மோகனப் பிரியாவிடம் இருந்து 4 கிராம் தங்க நகைகள், ரொக்கப் பணம், செல்போன் ஆகியவற்றைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.

''ஜாலியாக வாழ வேண்டும் என்ற ஆசையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக மோகனப்பிரியா தெரிவித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மின்சார ரயிலில் பிரபல கல்லூரி மாணவி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ROBBERY, TRAIN, COLLEGESTUDENT, STUDENTS, TAMILNADUPOLICE, ELECTRIC TRAINS, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்