'ரூட்டு தல' எல்லாம் கொஞ்சம் வாலை சுருட்டி வச்சுக்கோங்க'... 'இல்ல இது தான் நடக்கும்'... சென்னை போலீசார் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், மாநகர பேருந்துகளில் மாணவர்கள் அராஜகம் செய்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் எனச் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா காரணமாகக் கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு வகுப்புகள் திறக்கப்படுகிறது. பல மாதங்களாக வீட்டிலேயே மாணவர்கள் முடங்கி இருந்த நிலையில், நிச்சயம் பல மாணவர்கள் கல்லூரிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வெகு நாள் கழித்து ஒன்று சேர்வதால் பேருந்து தின கொண்டாட்டம் என்ற போர்வையில் தகராறில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகத்தில் வட சென்னை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் தல என்ற பெயரில் மாணவர்களைக் கூட்டமாகச் சேர்த்துக்கொண்டு, கூரையில் பயணம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கும் சரி, மாணவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோதிகளுக்கும் சரி காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது.

மேலும் பேருந்தில் பயணம் செய்யும் மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. மாணவர்கள் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இது தொடர்பாக உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஆசிரியர்களும், கல்லூரிக்கு வருவதற்கு முன்பே மாணவர்களைத் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். அதையும் மீறி பேருந்து தின கொண்டாட்டம் என்ற போர்வையில் பொதுமக்களுக்கு மாணவர்கள் இடையூறு செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

படிக்கின்ற வயதில் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலமே பாழாகிவிடும். எனவே இதுபோன்ற செயல்களைத் தவிர்த்து, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாணவர்கள் பேருந்துகளில் வரும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் தகராறு ஏற்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பேருந்து தின கொண்டாட்டங்களுக்குக் கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்