‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளம்பெண் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்துக் கண்காணித்ததில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரின் நடவடிக்கை போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துப் பேசியுள்ள ரயில்வே போலீஸார், “கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் தேவி (24) வேலூர் மாவட்டம் ஜோலர்பேட்டையைச் சேர்ந்தவர். இவர்மீது மொத்தம் உள்ள 57 வழக்குகளில் 43 வழக்குகள் நகை திருட்டு வழக்குகள். தேவியிடமிருந்து 70 சவரன் தங்க நகைகள், 77,500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரிடம் தேவி அளித்த வாக்குமூலத்தில், “எனக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. என் கணவர் வேலைக்குச் செல்லாததால் குடும்பம் நடத்த வழியில்லாமல் தவித்தேன். படிக்காத எனக்கு கையெழுத்து கூட போடத் தெரியாது. அதனால் எவ்வளவு தேடியும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதன்பிறகே ரயிலில் திருடத் தொடங்கினேன்.

தினமும் வேலைக்குச் செல்வதைப் போல நன்றாக உடை அணிந்துகொண்டு ரயிலில் சென்னைக்கு வருவேன். பயணிகள் பேசுவதை வைத்து யாரிடம் திருடலாம் என திட்டமிட்டு, தினமும் ஒன்று அல்லது 2 பேரிடம் நகை, பணம், செல்ஃபோன் போன்றவற்றை திருடி உடனே அதை விற்றுவிடுவேன். சில நேரங்களில் திருடும்போது சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கும் சென்றுள்ளேன். அது முதலில் அவமானமாக இருந்தாலும் பிறகு பழகிவிட்டது. திருடிய நகை, பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்தேன்.

கையில் பணம் வந்ததும் வாழ்க்கையே மாறிவிட்டது. விதவிதமாக உடை அணிவது எனக்கு பிடிக்கும் என்பதால் நடிகைகள் அணியும் உடைகளை எவ்வளவு விலை என்றாலும் வாங்கி விடுவேன். குழந்தையை என் கணவர் பார்த்துக்கொள்வார். நான் நன்றாக உடை அணிந்து வரும்போது யாருக்கும் என்மீது சந்தேகம் வராது. நான் திருட்டுத் தொழில் செய்வது எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது. அவர்கள் நான் சென்னையில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பார்ப்பதாக நம்பி வந்தார்கள். ஆனால் போலீஸார் என்னை பிடித்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

TRAIN, CHENNAI, WOMAN, THIEF, CONFESSION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்