பொங்கல் பண்டிகைக்கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி துணி எடுக்கச் சென்றபோது, பிரபல துணிக்கடையின் எஸ்கலேட்டரில் 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம், எம்.எஸ்.முத்துநகரைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது மகன் ரணீஷ் பாபு (13). இவர், வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி துணி எடுப்பதற்காக மகன் ரணீஷ் பாபுவை அழைத்துக்கொண்டு, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபலமான துணிக் கடைக்கு சசிகலா சென்றார். துணி எடுப்பதற்காகக் கடையில் ஒரு தளத்திலிருந்து 8-வது தளத்துக்கு சசிகலாவும், ரணீஷ் பாபுவும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

அப்போது, சிறுவன் ரணீஷ் பாபு எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடியின் மீது தலையைச் சாய்த்தவாறு கீழ்த்தளத்தை வேடிக்கை பார்த்தவாறே சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எஸ்கலேட்டர் 8-வது தளத்தில் சென்று சேரும் இடத்தில் உள்ள நிலையான சுவருக்கும், எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடிக்கும் இடையே உள்ள சிறு இடைவெளியில் சிறுவனின் தலை சிக்கிக் கொண்டதால் வலியால் துடித்துள்ளார்.  இதைப் பார்த்த பொதுமக்களும், தாய் சசிகலாவும் சத்தம் போட்டனர்.

சத்தம் கேட்டு கடையின் ஊழியர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சுதாரித்த சசிகலா, எஸ்கலேட்டரை நிறுத்துங்கள் என்று சத்தம் போட்டார். இதையடுத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் எஸ்கலேட்டரின் மின் இணைப்பை நிறுத்தி உடனடியாக சிறுவனை மீட்டனர். எனினும் ரணீஷ் பாபுவின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, சசிகலா தனது மகனை  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாய் சசிகலா மற்றும் கடை ஊழியர்கள் துரிதமாகச் செயல்பட்டதால் சிறுவன் ரணீஷ் பாபு உயிர் பிழைத்துக் கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தக் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CHENNAI, ESCALATOR, BOY, MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்