'பொண்ணு கல்யாணம் இருக்கே'... 'வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருந்த தந்தை'... 'மவராசன் போல வந்துட்டான் யா'... சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை குரோம்பேட்டை பகுதியை அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமார்.

இவரது ஆட்டோவில் பால் பிரைட் என்பவர் ஏறியுள்ளார். முன்னதாக, பால் பிரைட்டின் மகள் திருமணம் அங்குள்ள ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று நடைபெற்றது. இதனையடுத்து, மாலை பல்லாவரத்தில் வைத்து திருமண வரவேற்பு நடைபெற இருந்தது. இதற்காக, திருமணம் முடிந்ததும் ஆலயத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல சரவணகுமாரின் ஆட்டோவில் பால் பிரைட் ஏறியுள்ளார்.

அப்போது, அவருடன் மகளின் திருமணத்திற்காக வாங்கிய சுமார் 50 பவுன் நகைப்பை ஒன்றையும் கையில் வைத்துள்ளார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது தனது பையை எடுக்க பால் பிரைட் மறந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணகுமாரும் இதனை கவனிக்காத நிலையில், வீட்டிற்கு சென்ற பிறகு தான் மகளின் நகைப்பை காணாமல் போனது பால் பிரைட்டுக்கு தெரிய வந்துள்ளது.

உடனடியாக, பதறிப் போன பால்பிரைட், தனது தவறால் மகளின் திருமண நகைகள் தொலைந்ததால் மகளின் திருமண வாழ்க்கைக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு விடுமோ என அஞ்சியுள்ளார். சிறிது நேரம் கூட தாமதிக்காத பால் பிரைட், உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனிடையே, தனது ஆட்டோவில் பை ஒன்று இருப்பதை பார்த்த ஓட்டுநர் சரவணகுமார், அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார்.

அதில் நகை இருப்பதை அறிந்து கொண்டு அதனை உரியவரிடமே ஒப்படைக்க முடிவு செய்த சரவணகுமார், குரோம்பேட்டை போலீஸ் நிலையம் சென்றுள்ளார். அப்போது பால் பிரைட்டும் அங்கு இருந்ததால் சரவணகுமாரை வைத்தே நகைப்பையை தொலைத்த பால்பிரைட் என்பவரிடம் போலீசார் கொடுத்தனர்.

சுமார் 50 சவரன் நகை, தனது ஆட்டோவில் கிடைத்த போதும், அதனை உரிமையாளரிடமே ஒப்படைக்க நினைத்த சரவணகுமாரின் நேர்மையை போலீசார் வெகுமதியாக பாராட்டினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்