இது நார்மல் செருப்பு மாதிரியே இல்லையே...! ஹலோ...! உங்க செருப்ப கொஞ்சம் கழட்டுறீங்களா...? - செருப்பை பிரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்திக்கொண்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கே வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசன் அலி (23) என்பவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்தது. உடனே சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது அவர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடைமைகள் ஒன்றுவிடாமல் சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து அவரது காலில் அணிந்து இருந்த செருப்பை கண்டபோது, அது சாதாரணமான செருப்பு போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு பயணம் செய்யவிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (21) என்பவரின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அதில் அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் ரியால்களை கைப்பற்றினர்.

2 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்