‘சுங்கக் கட்டணம் கேட்டதால் நடந்த விபரீதம்’... ‘பூத் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நிர்வாகிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் கேட்டதால், நாம் தமிழர் கட்சி கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வந்தவர்கள், பூத் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி. இந்த சுங்கச் சாவடிக்கு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று வந்துள்ளது. அப்போது, வாகன கட்டணம் செலுத்துவது தொடர்பாக காரில் இருந்தவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், காரில் இருந்த ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், தனது கைகளால் அங்கிருந்த கண்ணாடியை உடைத்ததாகத் தெரிகிறது.
காரில் பயணித்தவர்கள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் என்று கூறப்படுகிறது. இவர்கள் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, சுங்க வரி கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது நடந்த இந்த சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த மோதலால் பரனூர் சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊழியர்களை தாக்கிவிட்டு, தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்